Friday, June 17, 2011

அக்குபஞ்சர் மற்றும் இறைவழி மருத்துவ முகாம்...

அக்குபஞ்சர் மற்றும் இறைவழி மருத்துவ முகாம்...

நேற்றைய நடவுகள்
உடல் நல விழிப்புணர்வு மற்றும் அக்குபஞ்சர் மற்றும் இறைவழி மருத்துவ முகாம்...
மகளிர் தினத்திலிருந்து யோசித்து, ஒரு வழியாக நேற்று நடந்து முடிந்தது எங்கள் அலுவலகத்தில் ( Chennai I Commissionerate, Chennai 34)

அக்குபஞ்சர் மற்றும் இறைவழி மருத்துவ முகாம்...

மரு. ரத்னா அவர்கள் நமது வாழ்க்கைக்கு தேவையான வாழ்க்கை முறை மாற்றம், சிந்தனை முறை மாற்றம் மற்றும் ஓய்வு எடுக்கும் முறை பற்றி அருமையாக, எளிமையாக அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் பேசினார்கள். காலை எழுந்தவுடன் காபி, தேநீர் அருந்துவதற்கு பதிலாக, அருமையான "பசுமை குடிநீர்" ( Green Juice) அருந்துவதன் நன்மைகளை விளக்கினார்கள். ஒரு குவளை நீரை கொதிக்க வைத்த இறக்கி, அதில் ஒரு கையளவு ஏதாவது ஒரு இலை (கருவேப்பிலை, கொத்தமல்லி, புதினா, அருகம்புல்,முருங்கை இலை ) போட்டு, ஒரு ஐந்து நிமிடம் கழித்து வடிகட்டி குடித்து வந்தால் வயிறு மிகவும் லேசாக உணர்வீர்கள். தேவையற்ற கழிவுகள், அதிக வெப்பம் ஆகியவை வெளியேற்றப்படும். காபி, தேநீர் குடித்தே ஆக வேண்டும் என்றிருப்பவர்களும் காலை உணவிற்குப்பிறகு அருந்தலாம்...அதிக பாதிப்பு இருக்காது. ஆனால் காலையில் வெறும் வயிற்றில் குடிக்கும் பழக்கத்தை விட்டு விட வேண்டும்....பிறகு உணவு அருந்தும் முறை. ரசித்து / சுவைத்து அருந்தும் வழக்கம் வந்தாலே, வயிற்றிற்கும், மண்ணீரலிற்கும் பாதி சுமை குறையும். ஜீரணத்தின் 70 சதவீதம் வாயில் உமிழ்நீருடன் கலந்து முடிவடைந்தாலே பாதி நோய்களை தவிர்த்து விடலாம்.....அது போல உணவு அருந்தும்போழுது பேப்பர் படிப்பது, தொலைகாட்சி பார்ப்பது போன்ற வேறு கவன சிதறல் இல்லாமல் இருக்க வேண்டும். அதுவும் வயிற்றிற்கு நன்மை செய்யும்......

சிந்தனை முறை மாற்றம் வர நல்ல எண்ணங்களையே எண்ணி, அவற்றை நோக்கிய செயல்பாடு வேண்டும்.... ஓய்வு எடுக்க, இரவு 9-10 மணிக்குள் படுக்கைக்கு செல்லும் வழக்கம் வர வேண்டும். படுத்தவுடன் அன்று நடந்தவைகளை ஒரு கணம் நினைத்துபார்த்து, நாளைய செயல்களையும் திட்டமிட்டு முடித்தவுடன், மனதிலிருந்து அனைத்து எண்ணங்களையும் அகற்றி, அமைதியுடன் உறங்க செல்ல வேண்டும்....

பேச்சு முடிந்தவுடன், வந்திருந்தோர் பல கேள்விகளும் கேட்டனர்...மரு. ரத்னா மற்றும் மரு.தமிழவேள் அவர்கள் அழகான முறையில் விளக்கம் அளித்தனர்.....கேள்விகளில் சில, "மன நலம் சார்ந்த பிரச்சினைகளை உங்கள் முறையில் சரி செய்ய முடியுமா., புற்று நோயை குணப்படுத்த முடியுமா, அவசர கால சிகிச்சைகளை உங்களால் செய்ய முடியுமா.....நீங்கள் ஆங்கில மருத்துவ குறிப்புகளை பார்ப்பதில்லையா...."

பிறகு சிகிச்சை முறை...மரு.தமிழவேள் அவர்கள் இறைவழி முறையிலும், மற்ற மருத்துவர்கள் (ரத்னா, மாலினி, கற்பகம், பவானி, செல்வி) அக்குபஞ்சர் முறையிலும் சிகிச்சை அளித்தனர்.....அனைவருக்கும் நாடிப்பரிசோதனை செய்து தேவைப்பட்டோருக்கு சிகிச்சையும் மற்றவர்க்கு நலமாய் வாழ நுண்ணழுத்தப்புள்ளிகளை எவ்வாறு அழுத்துவது என்பதையும் சொல்லிக்கொடுத்தனர்....

முகாமிற்கு வந்தவர்களுக்கு ஒரு சிறு தொகை வாங்கி உபயோகமான உடல் நலக்குறிப்புகள் அடங்கிய ஒரு கையேடு மற்றும் குளியல் போடி ஒரு பொட்டலமும் தரப்பட்டது.....

மிகவும் உபயோகமுள்ளதாக அனைவரும் உணர்ந்தனர். இதில் கலந்து கொள்ள விடுபட்டோரும் வந்தோர் அனுபவம் கேட்டு, பிறிதொரு முறை நடக்குமா என விசாரித்த வண்ணம் உள்ளனர்.........